பெரம்பலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின், பெரம்பலூர் முகாம் அலுவலகத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் திடீர் ரெய்டு நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் முகாம் அலுவலகமும், மாவட்ட தி.மு.க., அலுவலகமும் ஒரே கட்டிடத்தில், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், தேர்தலுக்காக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக, தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை 5.30 மணியளவில் தாசில்தார் மணிவண்ண மாணிக்கம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும், பெரம்பலூர் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் முகாம் அலுவலகமும், மாவட்ட தி.மு.க., அலுவலகமான கட்டிடத்தில் ரெய்டு நடத்தச் சென்றனர். அப்போது தி.மு.க.,வினர் அங்கு ரெய்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டனர். இதன்பின், 6.30 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் பறக்கும் படையினர், முன்னாள் அமைச்சர் ராஜாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் எதும் கிடைத்ததாக தெரியவில்லை. இச்சம்பவத்தால் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தி.மு.க.,வினர் வீடு மற்றும் தி.மு.க., அலுவலகங்களில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் ரெய்டு நடத்துவதால் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அ.தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாக தி.மு.க.,வினர் கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment