Sunday, April 3, 2011

வெளி பார்வைக்கு மட்டுமே வி.சி., - பா.ம.க., ஒற்றுமை : தேர்தல் களத்தில் மக்களை ஏமாற்ற நடக்கும் நாடகம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் எதிரும், புதிருமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.,வும் தி.மு.க.,வுடன் கூட்டணியில் இடம் பெற்ற நிலையில், வெளி பார்வைக்கு மட்டுமே, தேர்தல் களத்தில் ஒற்றுமையாக இருந்தாலும், இருகட்சிகளும், தேர்தலில் காலை வாரி விட காத்திருக்கின்றன.

தர்மபுரி மாவட்டத்தில், ஜாதி ரீதியான உணர்வுடன், தேர்தல் சந்திப்புகள் நடந்து வருகின்றன. கடந்த காலங்களில் எதிரும், புதிருமாக இருந்த பா.ம.க.,வும், விடுதலைச் சிறுத்தைகளும் தேர்தலில் ஒற்றுமையாக கைகோர்த்து நின்ற போதும், அந்தந்த கட்சியில் உள்ளவர்களின் அடிமனதில், துளி அளவு கூட தோழமை உணர்வு இல்லை என்பது தெரிகிறது.

சமீபத்தில் அரூர் தொகுதியில் பிரசாரத்துக்கு வந்த திருமாவளவன், "வட மாவட்டங்களில், 124 தொகுதிக்கு மேல் வெற்றி, தோல்வியை விடுதலைச் சிறுத்தைகளும், பா.ம.க.,வும் நிர்ணயிக்கும். மேற்கு மண்டலத்தில், 69 தொகுதிகளில், கொ.மு.க., வெற்றியை நிர்ணயிக்கும்' எனக் கூறி விட்டுச் சென்றார்.

ஆனால், இந்த மூன்று கட்சிகளும், ஜாதி அடிப்படையில் இருப்பதோடு, மூன்று கட்சியினரும் கடந்த காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதியில் ஜாதி மோதல்களுக்கு காரணமாக இருந்துள்ளனர். கொ.மு.க., மற்றும் பா.ம.க.,வினர் மீது, பி.சி.ஆர்., பிரிவில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு மட்டும் வேண்டுமானால் இவர்கள் கைகோர்த்து களத்தில் வலம் வந்தாலும், உள்ளுக்குள் ஒருவரை மாற்றி ஒருவர் காலை வாரி விடுவதிலும், தேர்தலில் உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பா.ம.க.,வினர் நடத்தும், "டிவி'யில் திருமாவளவன் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டங்களை பெரும் அளவில் ஒளிபரப்புவதில்லை. மாறாக, திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பதிவு செய்ய வேண்டாம் என, உள்ளூர் நிருபர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் ஒற்றுமை இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூட்டத்துக்கு, கூட்டம் கூறி வந்தாலும், ஒற்றுமை எந்த அளவில் இருக்கிறது என்பதை கருணாநிதி உள்ளிட்ட அக்கட்சி கூட்டணியில் இடம் பெற்று இருப்பவர்களுக்கு தெரியவில்லை.

தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து ஜாதிய ரீதியான அரசியல் செல்வாக்கு, பிற சிறுபான்மை சமுதாயத்தினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஜாதிய கட்சிகள் மீது இந்த தேர்தலில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த தேர்தலில் ஜாதிய செல்வாக்குள்ள கட்சிகள் தங்கள் மூட்டை, முடுச்சுகளை காட்டி கொண்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

No comments:

print