Saturday, April 16, 2011

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை தேர்தலுக்காக முடக்குவது சரியா? - கருணாநிதி கேள்வி

சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை, அதன் பணிகளைச் செய்யவிடாமல் தேர்தலுக்காக முடக்குவது சரியா, என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


தேர்தல் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் முழுவதுமாக ஆளும் திமுகவுக்கு எதிராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி ஆரம்பத்திலிருந்தே கூறி வந்துள்ளார். அதிமுகவினர் சொல்வதை, உடனே உத்தரவாக தேர்தல் ஆணையம் வெளியிட்டு விடுகிறது என பலரும் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

"தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும்.

முடிவுகள் மே 14-ம் தேதிதான் தெரியும். ஆனால் இப்போதுள்ள சட்டப்பேரவைக் காலம் மே 16-ம் தேதி முடிவுற்று அடுத்த சட்டப்பேரவை மே 17-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். எனவே மே 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் ஒரு புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும்.

இடையில் இருக்கின்ற நாள்கள் மே 15, மே 16 ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே. அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்குமா என்றால் நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்கும். எண்ணிப் பார்த்துவிட்டுதான் இந்தத் தேர்தல் தேதிகளை அறிவித்திருக்கின்றது.

மே 17-ம் தேதி புதிய சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால் எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13-ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும்.

மேலும் சில நாட்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதத்தின் முதல் வாரத்திலோ அனைவரும் எதிர்பார்த்ததைப் போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம் அல்லவா? இந்த கேள்விகளை நான் ஏற்கெனவே எழுப்பி உள்ளேன்.

இது ஒருபுறமிருக்க, தமிழக மக்கள் அளித்த தீர்ப்புகள் மே 13-ம் தேதி வரை அறைகளிலே பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்கப்படமாட்டாது, எடுக்கப்படக் கூடாது. திடீரென ஏதாவது ஒரு முக்கிய முடிவு, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் அப்போது என்ன செய்வது? தேர்தல் ஆணையத்துக்கே வெளிச்சம்!

அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம் என்பார்களே அந்த நிலைதான்! இப்போதே பத்திரிகைகள் எல்லாம் தலைமைச் செயலகம் வெறிச்சோடிக் கிடப்பதாகவும் அதிகாரிகள் எல்லாம் குடும்பத்துடன் விடுமுறையில் செல்லவிருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அது மாத்திரமல்ல, அரசு சார்பில் நாட்டில் நடைபெற்றாக வேண்டிய முக்கியமான பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இது. அந்தப் பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்றால் தான் ஜூன் மாதத்தில் தொடங்கவிருக்கும் தென்மேற்குப் பருவக்காற்று காலத்தின்போது வேளாண்மைப் பணிகளை ஒழுங்காகச் செய்திட முடியும். பராமரிப்புப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு கூட செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியுள்ளதாம். அதனால் அடிப்படைப் பணிகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அதன் அமைச்சர்களும் ஐந்தாண்டு காலத்துக்கு அதாவது மீண்டும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை அவர்களது பொறுப்புகளை நிறைவேற்ற தகுதி படைத்தவர்கள்.

ஆனால் அவர்களின் பணிகளை நிறைவேற்ற முடியாமல் தடுப்பது எந்த வகையில் நியாயமோ? சட்டம் படித்தவர்களும் தேர்தல் ஆணையமும்தான் இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும்," என்று கூறியுள்ளார்

No comments:

print