Monday, April 18, 2011

ரூ.81 லட்சம் வினியோகம்-மதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்?

மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் ரூ. 81 லட்சம் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அந்தத் தொகுதிக்கு மறு தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.


சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையின் 10 தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனைகள் நடத்தினர். இதில் மதுரை மாவட்டத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்தனர்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட நேரு நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரி ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த ஒரு காரை சோதனையிட்டபோது சிக்கிய ஒரு டைரியில் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 4 வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் எழுதப்பட்டிருந்தன.

ரூ.81.20 லட்சம் வரை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. 65வது வார்டுக்கு ரூ.16.35 லட்சம், 66வது வார்டுக்கு ரூ.18.96 லட்சம், 67வது வார்டுக்கு ரூ.21.11 லட்சம், 69வது வார்டுக்கு ரூ.24.41 லட்சம் தரப்பட்டுள்ளதாக அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த டைரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் உதவியோடு சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தமிழக தேர்தல் கமிஷனும் மதுரை மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளது.

இது குறித்து சகாயம் கூறுகையில், மதுரை மேற்கு தொகுதியில் ஒரு காரில் இருந்த ஒரு நபரை சோதனையிட்டபோது அவரிடம் ஒரு டாக்குமெண்ட் கைப்பற்றப்பட்டது. அதில் எந்ததெந்த வார்டுக்கு எவ்வளவு பணம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அது குறித்து விசாரித்து வருகிறோம்.

ஆய்வுக்கு பிறகு இது தொடர்பான அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். தவறு நடந்திருந்தால் மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும் என்றார்.

No comments:

print