Tuesday, April 12, 2011

நாளை சட்டமன்ற தேர்தல்: 54,314 வாக்குச் சாவடிகள்- கண்காணிக்க 10,000 வெப் கேமராக்கள்!

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

8 மணி முதல் மாலை 5 மணி வரை:

தமிழகத்தைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 2773 பேர் போட்டியிடுகின்றனர்.

இங்கு நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. வாக்குப் பதிவுக்கு அத்தனை வாக்குச் சாவடிகளும் தயாராக உள்ளன. மின்னணு இயந்திரங்களை அனுப்பி பொருத்துவது, அழியாத மை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வாக்குச் சாவடிகளுக்கு வந்து விட்டன.

இன்று வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள ஊழியர்கள் மின்னணு இயந்திரங்களை பொருத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

54,314 வாக்குச் சாவடிகள்-10,000 வெப் கேமராக்கள் :

வாக்குப்பதிவுக்காக மொத்தம் 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் அத்தனை வாக்குச் சாவடிகளும் பதட்டமானவை என்று போலீஸ் டிஜிபி போலாநாத் கூறியிருந்தார். இருப்பினும் தற்போது அத்தனை சாவடிகளுக்கும் ஒரே மாதிரியான பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் குறிப்பிட்ட 10,000 சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படவுள்ளது.

4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள்:

சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் ஆண்கள் 2,30,86,295 பேராவர். பெண்களின் எண்ணிக்கை 2,28,63,481 பேர். திருநங்கையர் எண்ணிக்கை 844.

வாக்காளர்களுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையமே பூத் ஸ்லிப் கொடுத்துள்ளது. அது கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது இல்லாமலும் கூட வாக்களிக்கலாம். புகைப்பட அடையாள அட்டை கட்டாயம்.

13,000 தேர்தல் பார்வையாளர்கள்:

வாக்குப்பதிவைக் கண்காணிக்க 13,000 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் மட்டும் ஒன்றே கால் லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் மாநிலப் போலீஸார். மற்றவர்கள் துணை ராணுவப்படையினர். வாக்குச் சாவடிகளில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பண விநியோகத்தைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு:

வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் பணம் தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வீடு வீடாக சென்று கேன்வாஸ் செய்ய அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதைப் பயன்படுத்தி வீடு வீடாகப் போய் பணம் கொடுக்கப்படலாம் என்ற சந்தேகம் உள்ளதால் அதைத் தீவிரக் கண்காணித்து வருகின்றனர் தேர்தல் பார்வையாளர்கள்.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் குறிப்பிட்ட 26 தொகுதிகளில்தான் பெருமளவில் பணம், இலவசப் பொருட்கள் விநியோகம் தடையில்லாமல் நடந்து வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு பெருமளவில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இங்கு தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கப்படுவது உறுதியானால் அத்தொகுதிகளில் தேர்தலை நிறுத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிரது.

தேர்தல் ஆணையத்தின் இந்தக் கண்காணிப்புப் பட்டியலில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியும் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தலை பதட்டமில்லாமலும், நியாயமான முறையிலும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ராணுவ கட்டுப்பாட்டில் வாக்குச்சாவடிகள்:

இந் நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலையொட்டி சென்னை நகரில் 16 தொகுதிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்து மாவட்டங்களின் 5 தொகுதிக்கான சில பகுதிகளும் சென்னைக்குள் வருவதால் அங்கும் பாதுகாப்பு கொடுத்துள்ளோம். 952 கட்டிடங்களில் 3723 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி, முகமது சதக்கல்லூரியில் நடைபெறும். பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதவிர 16 கம்பெனி துணை ராணுவமும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுகிறார்கள். ஓட்டு போடுபவர்கள் தவிர வேறுயாரும் அத்துமீறி நுழையா வண்ணம் துணை ராணுவத்தினர் கண்காணிப்பார்கள். இதுதவிர 304 ரோந்து படையும், 17 பறக்கும் படை போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர்.

வாக்குப்பதிவு எந்திரம் உள்ள இடங்கள், ஓட்டு எண்ணும் இடங்களில் இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இதுதவிர 2079 தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வசம் உள்ள 1936 துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த ரூ. 73 லட்சம் பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2700 ரவுடிகள் பட்டியல் எடுக்கப்பட்டு அதில் 2600 பேரிடம் ஒழுங்காக இருப்போம் என எழுதி வாங்கப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த 60 வாக்குச்சாவடிகளில் 3 அடுக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.

புதுவை, கேரளாவிலும் நாளை தேர்தல்:

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

No comments:

print