Thursday, April 14, 2011

காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்

சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, முன்னாள் சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் உள்பட 19 பேரை திடீரென தங்கபாலு நீக்கியுள்ளார்.


ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார் சேகர். பின்னர் அதிமுகவில் இணைந்தார். அவரை மயிலாப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக்கினார் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதாவைச் சுற்றியிருந்த ஜால்ராக்களைத் தாண்டி ஜெயலலிதாவிடம் நெருங்க முடியாமல் போனதால் சேகர் கடுப்பாகி திமுக பக்கம் சாய்ந்தார். திமுக தரப்புடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.

இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இருப்பினும் எம்.எல். ஏ பதவியில் தொடர்ந்து நீடித்து வந்தார் சேகர்.

அவர் திமுகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மயிலாப்பூர் தொகுதியில் மீண்டும் சீட் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் அவர் இருந்தார்.

ஆனால் தங்கபாலு போட்ட பலே நாடகத்தால் சேகருக்கு சீட் கிடைக்காமல் போய் விட்டது. மாறாக, தங்கபாலுவே தலையைச் சுற்றி, மூக்கைச் சுற்றி, கடைசியில் தானே வேட்பாளராகி விட்டார்.

இதனால் கடுப்பானாலும் பெரிய அளவில் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்தார் சேகர். அதேசமயம், அவரும், சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த கராத்தே தியாகராஜனும் கட்சிப் பணியாற்றவில்லை. இந்த நிலையில் நேற்று என்டிடிவிக்கு சேகர் அளித்த பேட்டியில் தங்கபாலு கூப்பிடாமல் நான் எப்படிப் பிரசாரம் செய்ய முடியும். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 10 அல்லது 15 சீட்களுக்கு மேல் கிடைக்காது என்று கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 19 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் தங்கபாலு. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை-சேகர்

இந்த நீக்கம் குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், என்னை கட்சியிலிருந்து நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து நான் கட்சி மேலிடத்தை சந்தித்துப் பேசுவேன் என்றார்.

இதற்கிடையே, தங்கபாலுவை கட்சி மேலிடம் விரைவில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கலாம் என்ற செய்தியும் காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து வெளியாகியுள்ளது.

No comments:

print