Wednesday, April 6, 2011

அதிமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும்: பிரகாஷ் காரத்

கோவை & நெல்லை: தமிழகத்தில் அதிமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் அந்தக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கோவையில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, ஊழல் காரணமாக மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதன் காரணமாக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கேரளாவில் விலைவாசி உயர்வு இருந்தது போதும் ரேசன் கடையில் மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி கட்டுக்குள் வைத்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று கோவையில் பேசும்போது கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராகி விட்டனர் என்று கூறியுள்ளார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர், அவர் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. தமிழ்நாட்டை பற்றி மட்டும் அவர் கவலைப்படட்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனரிடம் வலியுறுத்தி இருந்தோம். தேர்தல் கமிஷனும் தமிழகத்தில் தீவிர சோதனை நடத்தி சட்ட விரோதமான பணங்களை பறிமுதல் செய்து வருவது வரவேற்கத்தக்கது. நேற்று கூட திருச்சியில் 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக தனி மெஜாரிட்டியில் வெற்றிபெறும். கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு எழவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. முழுமையான காரணம் வெளிவரும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்றார்

அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்-நல்லகண்ணு:

வரும் சட்டபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்தார்.

நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஊழல், மணல் கொள்ளை, நிர்வாகச் சீரழிவு, சமூக பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டு காலமாக விலைவாசி உயர்வும், மின்வெட்டும் அதிகரித்துள்ளன. விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டுமென்றால் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாங்கள் பிரசாரத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் பேச்சைக் கேட்டு நடக்காததால் அதன் செயல்பாடுகளை நெருக்கடிகால நிலை என்கின்றனர். இது முதல்வர் கருணாநிதியின் இயலாமையை காட்டுகிறது.

160 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.

கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தேர்தல் முடிவு வெளியான பிறகு எங்களின் நிலை குறித்து அறிவிப்போம். தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

No comments:

print