Sunday, April 3, 2011

திமுக ஆட்சியில் கற்காலத்திற்கு சென்றது தமிழகம்: ஜெயலலிதா தாக்கு

நெல்லை: திமுக ஆட்சியில் கற்காலத்திற்கு சென்ற தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு நெல்லையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.


அதி்முக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை டவுனி்ல் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது,

தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டிற்கு எனது ஆட்சியில் வித்திடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் விரும்பும் வகையில் இட ஒதுக்கீடு அமையவி்ல்லை.

கருணாநிதி ஆட்சியில் இட ஒதுக்கீட்டினால் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதால் அதனை திரும்ப ஒப்படைத்தனர். இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீ்ட்டை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் கண்டிப்பாக பரிசீலனை செய்யப்படும்.

வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை தி்முகவினர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இஸ்லாமியர்கள் திருமண பதிவு செய்வதில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படும்.

இஸ்லாமியர்களின் சமுதாய மேம்பாட்டிற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கற்காலத்துக்கு சென்ற தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதி்முக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

No comments:

print