Saturday, April 2, 2011

ஓட்டு போட கைதிகள் மறுப்பு

ஓட்டுப்போட தகுதியுள்ள 450 கைதிகளில் 400 பேர் ஓட்டுப்போட மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல், வரும் 13ம் தேதி நடக்கிறது. பொதுமக்கள் நேரடியாக சென்று ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப் போடுகின்றனர். தேர்தல் பணியில் உள்ளவர்கள், போலீசார் என பலரும் தபால் மூலம் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும் சிறையில் உள்ள கைதிகளில் அனைவருக்கும் ஓட்டுப்போட அனுமதியில்லை. குண்டர் சட்டத்தில் இருப்போர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டோர் என குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஓட்டுப் போடுவதற்கான அனுமதி உள்ளது. அதுவும் தபால் வழி.

அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தலில், தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் உள்ள 450 கைதிகளுக்கு ஓட்டுப் போடுவதற்கான அனுமதி உள்ளது. இவர்களில், 50 கைதிகளைத் தவிர, 400 பேர் ஓட்டுப்போட மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிகிறது. வேட்பாளர்களுக்கு கிடைக்கும் பல லட்சம் ஓட்டுக்களில் இந்த 400 ஓட்டுக்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாது என்றாலும், ஓட்டளிக்காததற்கு இவர்கள் கூறும் காரணம் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

தபால் ஓட்டை பொறுத்தவரை, உண்மையான முகவரியை அளித்தால் மட்டுமே, ஓட்டுப்போட அனுமதி கிடைக்கும் என்பதால் இவர்கள் ஓட்டுப்போட மறுத்துள்ளதாக தெரிகிறது. இந்த 400 பேரைத் தவிர, மற்ற 50 பேர், இந்த தேர்தலில் தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பங்கு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

print