Monday, April 11, 2011

தேர்தல் கமிஷன் : நடுநிலையில் பணியாற்ற தயாராகும் அதிகாரிகள்

ஓட்டுக்கு பணம் வாங்கினீர்களா...? கொடுத்தீர்களா...? அப்படி செஞ்சீங்கன்னா ஜெயிலுக்குப் போக வேண்டி வரும்... கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை.... இது தேர்தல் கமிஷன், தற்போதைய தேர்தல்களில் வாக்காளர்கள் பணத்திற்காகவும், பரிசுக்காகவும் விலைக்கு வாங்கப்படுவதை தடுப்பதற்காக கையிலெ டுத்திருக்கும் ஆயுதம்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதையும், அதற்காக பணம் கடத்தப்படுவதையும் தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு பறக்கும் படைகளை அமைத்து, அனைத்து இடங்களிலும் சோதனைகளை நடத்தி வருகிறது. விளைவு... திருச்சியில், 5.11 கோடி ரூபாய், ஆவடி அருகே, 2.2 கோடி ரூபாய், மதுரையில், 19 லட்சம் ரூபாய் என, அரசு கருவூலத்தில் சேரும் பணத்தின் எண்ணிக்கை, 42 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.இது ஒருபுறம் இருக்க, தேர்தல் பாதுகாப்பை கவனிக்கும் போலீசையும், தங்கள் பிடிக்குள் தேர்தல் கமிஷன் வைத்துள்ளது. மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள டி.ஜி.பி.,யையும், உளவுத்துறை தலைவர் மற்றும் மதுரை கமிஷனர், ஐ.ஜி., மற்றும் பல மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் இதற்கு எடுத்துக் காட்டு.

தொடர் புகாரின் அடிப்படையில், செய்யாறு இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்தும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தேர்தல் பாதுகாப்பை கண்காணிக்கவும், தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடும் அதிகாரிகளை கண்காணிக்கவும், வெளிமாநில ஐ.ஜி.,க்களை நியமித்தது, தேர்தல் கமிஷனுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.இறுதியாக, தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் உள்ள போலீஸ்காரர்கள், அவர்கள் பணியாற்றும் பகுதியில் உள்ள பூத்களில் பணியாற்றக் கூடாது என்றும், மாற்றப்பட வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இது, போலீசார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினாலும், சந்தேகத்துக்கான சந்தர்ப்பமே கொடுக்கக் கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது.போலீசை பொறுத்தவரை, இன்ஸ்பெக்டர்கள் முதல், உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் வரையுள்ளவர்களில், இவர்கள் யாருக்கு சாதகமானவர்கள் என்பதை ஓரளவு கணித்துவிட முடியும். கீழ்நிலையில் உள்ள போலீசாரை கணிப்பது மிகவும் கடினம்.

தேர்தல் காலங்களில், உளவுத்துறையினர் எப்போதுமே ஆளுங்கட்சிக்கு சாதகமான பணிகளை செய்வது தவிர்க்க முடியாதது. ஆளுங்கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளில் பிரச்னை, எங்கு எளிதாக ஜெயிக்கும், மக்கள் மனநிலையை உளவுத்துறையினர் கணித்து, தங்கள் தலைமைக்கு அளிப்பர். இதைக் கொண்டே, ஆளும் அரசை சேர்ந்தவர்கள், அடுத்தகட்டத்திற்கு முன்னேறுவர். இது, எதிர்க்கட்சிக்கும் சில நேரங்களில் சாதக பாதகங்களை அளிக்க வல்லது.இந்தத் தேர்தலில், தேர்தல் கமிஷனின் அதிரடி, கண்காணிப்பு உத்திகள், போலீஸ் அதிகாரிகளை நடுநிலையாக சிந்திக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிஏற்படுத்தித் தந்துள்ளது. இம்முறை, எந்த அதிகாரியையும், பாரபட்சமானவர் என அவ்வளவு சீக்கிரம் குற்றம்சாட்டிவிட முடியாது; தங்களது, "நேர்மைத் தனத்தில்' அவர்கள் கில்லாடியாக உள்ளனர்.

அதே நேரத்தில், அவர்கள் கீழ் பணியாற்றும் எஸ்.ஐ., முதல், அடிநிலை போலீசார் வரையில், அனைவரது மன நிலையிலும் சற்று தடுமாற்றம் உள்ளது. இவர்கள், உள்ளூர் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் மனப்போக்கை தெரிந்தவர்கள். பெரும்பாலும், ஏதேனும் ஒரு கட்சிக்காரருடன் நெருக்கம் வைத்துள்ளவர்களாக உள்ளனர்.அப்படியிருக்கும்போது, அவர்களுக்கு யார் பக்கம் நிற்பது என்பதில் மிகப்பெரிய சிக்கல் நீடிக்கிறது. அவர்களும் பிரச்னையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், நடுநிலையாக செயல்பட்டே ஆகவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தஞ்சையில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பாதுகாப்புக்கு போலீசாரே இல்லாததால், டி.ஆர்.பாலு, நேரடியாகவே மிரட்டல் விடுக்கும் தொனியின் பேசினார். அக்கூட்டத்தில், முதல்வரே பாதுகாப்பு குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டினார்.இந்த பிரச்னை அடுத்தடுத்த பிரசார கூட்டங்களில் இருக்கக் கூடாது என்பதில் போலீசார் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டுள்ளனர். அதே நிலைதான் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கான பாதுகாப்பிலும் எடுக்கப்பட்டுள்ளது.போலீசார் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்துவரும் தேர்தல் கமிஷனின் பார்வையாளர்கள், ஒரு சிறு குறை கூட கண்டுவிடக் கூடாது என்பதில், போலீஸ் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். கட்சி சாயம் பூசப்பட்டவர்கள் கூட, நேர்மையாக நடந்து தேர்தல் கமிஷனின் பாராட்டை பெற்று வருகின்றனர்.

No comments:

print