Saturday, April 9, 2011

கடலூர் திமுக எம்எல்ஏ நீக்கம்: அன்பழகன் அறிப்பு

சென்னை: கடலூர் தொகுதி திமுக எம்எல்ஏ அய்யப்பன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.


கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி தி.மு.க. அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளது. இதனை தி.மு.க. பொது செயலாளரும், அமைச்சருமான அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அய்யப்பன் எம்.எல்.ஏ. கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு எனக்கு சீட் தரவில்லை. இதற்கு காரணம் என்னுடைய வளர்ச்சியை பிடிக்காதவர்கள் திட்டமிட்டு எனக்கு எதிராக செயல்பட்டதே ஆகும். அதோடு, என்னை கட்சியை வீட்டு நீக்க வேண்டும் என்ற ஆதங்கமும் அவர்களிடையே இருந்தது.

தற்போது தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. தலைவர் கருணாநிதிக்கு எதிராக எந்த கருத்தையும் பரப்பவும் இல்லை.

நான் கடந்த 22-ந்தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்தேன். அப்போது எனக்கு எதிராக சிலர் திட்டமிட்டு வேலையை செய்து வருகிறார்கள். அதனால் தமிழகத்தில் வேறு தொகுதி தந்தால் நான் எனது நண்பர்களுடனும், ஆதரவாளர்களுடனும் சென்று பார்க்கிறேன் என்றேன்.

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பின்போது நான் கோபாலபுரத்தில் இருந்தேன், இதன்பின்பு கடலூரில் நடந்த சம்பவத்தை (கட்சி அலுவலகம் மீது தாக்குதல்) கேள்விப்பட்டு, இதுபோன்ற சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை கண்டித்தேன்.

மேலும் இது போன்று ஈடுபட்டால் என்னுடன் பேசாதீர்கள் என்று அவர்களை எச்சரிக்கையும் செய்தேன். நான் சட்டமன்றம் நடந்த அனைத்து நாட்களிலும் கலந்துகொண்டு, தொகுதி வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன். இதோடு மட்டும் இல்லாமல் 33 ஆண்டுகளாக முதல்வர் கருணாநிதியை என்னுடைய இதயத்தில் ஏற்றுக்கொண்டு என்னையும், என்னுடைய குடும்பத்தையும், அர்ப்பணித்து வருகிறேன்.

என்னுடைய உயிர் உள்ளவரைக்கும் ஏழைகளுக்காக சேவை செய்வதே எனது லட்சியம். இது நேர்மைக்கும் நியாயத்திற்கும் கிடைத்த தண்டனையாக இதை கருதுகிறேன்," என்றார்.

No comments:

print