Saturday, April 2, 2011

தேர்தல் கமிஷன் தான் முதல் எதிரணி: முதல்வர் ஆவேசம்

பள்ளிபாளையம்: ""நமக்கு அ.தி.மு.க., அணி எதிரணியாக தெரியவில்லை. தேர்தல் கமிஷன் தான் எதிரணியாக தெரிகிறது. அதை முறியடிக்க தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்,'' என, பள்ளிபாளையத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்கவும், சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று ஈரோட்டில் இருந்து நாமக்கல் மாவட்டம் வழியாக சென்றார். அப்போது, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து, பள்ளிபாளையம் மற்றும் வெப்படை ஆகிய பகுதியில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நான் எப்போது வந்தாலும் பள்ளிபாளையம் பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். அதற்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதையும் செய்தேன்; சொல்லாததையும் செய்தேன். அதனால், மனநிறைவுடன் உங்கள் மத்தியில் ஓட்டு கேட்க வந்துள்ளேன். இந்த தள்ளாத வயதிலும் நான் ஓட்டு கேட்டு வருவதற்கு காரணம், ஜெயலலிதாவின் ஆக்டோபஸ் கும்பலின் கையில் இந்த நாடு, நாட்டு மக்களும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே தவிர, வேறு இல்லை. நமக்கு அ.தி.மு.க., அணி எதிரணியாக தெரியவில்லை. தேர்தல் கமிஷன் தான் எதிரணியாக தெரிகிறது. அதை முறியடிக்க தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இப்பகுதியில் நெசவுத்தொழில் நிறைந்து காணப்படுகிறது. இந்த தொழில் பாதுகாக்கப்படும். சாயக்கழிவு நீருக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும்.மின்தடை விரைவில் தடை செய்யப்படும். நெய்வேலி, கூடங்குளம் திட்டங்கள் நிறைவேறவில்லை. அத்திட்டம் நிறைவேறினால் மின்தடை நீங்கும்; உங்களுக்கு போதுமான அளவு மின்சாரம் வழங்கப்படும். இந்த நல்லாட்சி தொடர எங்களை ஆதரியுங்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

print