Tuesday, April 12, 2011

தேர்தலில் வாக்களிக்க முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை

சென்னை: நாளை நடைபெறும் சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வசதிக்காக அவர்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்படும் என்று தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா தெரிவித்துள்ளார்.


நாளை தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெறவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவை வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்குத் தனியாகவும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு பாலாரும் செல்லக் கூடிய வகையில் பொது சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், தற்போது வயதானவர்கள், உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக வாக்குச் சாவடி அமைக்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் வயதானவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும், உடல் ஊனமுற்றவர்களுக்கு வாக்களிக்க ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஏற்கனவே கூறியிருந்தார்.

மேலும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் அவர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் உடல் ஊனமுற்றவர்கள் வாக்களிக்கச் செல்ல வசதியாக ரேம்ப் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் அதில் வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து பதில் ஏதும் வந்ததா என்று கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதாவிடம் கேட்டபோது, இதுவரை பதில் வரவில்லை. எந்த நேரமும் பதில் வரலாம். இப்போதைக்கு வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் சேர்ந்து ஒரே வரிசை அமைக்கப்பட உள்ளது என்றார்.

இதற்கிடையே வாக்குச் சாவடிகள் அனைத்தும் நேற்றே தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டு விட்டன.

வாக்குப் பதிவின்போது தேவைப்படும் பொருட்கள், அழியாத மை உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டு விட்டன.

No comments:

print