Monday, April 11, 2011

விஜயகாந்த் பிரசார வேன் மீது செருப்பு வீச்சு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அங்கு வீதி வீதியாக சென்று தீவிர ஓட்டு வேட்டையாடினார்.


கடந்த 2 நாட்களாக ரிஷிவந்தியம் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வந்த விஜய்காந்த், தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று முகையூர், காந்தி ரோடு, மேட்டுச்சேரி, பள்ளிச்சாம்பல், சம்பை, முருங்கப்பாடி, திட்டப்பட்டினம், கே.சி.தாங்கல், வடக்கு தாங்கல் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ரிஷிவந்தியம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த சிவராஜ் தொகுதிக்கு வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யவே இல்லை. எனக்கு ஒருமுறை வாக்களியுங்கள். நான் இப்பகுதிக்கு நல்ல குடிநீர் வசதியை உடனடியாக கொண்டு வருவேன்.

அத்துடன் சாலை வசதிகளை செய்து தருவேன். இந்த தொகுதியில் மருத்துவமனையே இல்லாமல் இருக்கிறது. நான் வெற்றி பெற்றதும் மிகப் பெரிய அரசு மருத்துவமனையை இந்த தொகுதியில் உருவாக்குவேன். அத்துடன் பஸ் வசதியே இல்லாமல் இருக்கும் இந்த தொகுதியில் பஸ் வசதியை ஏற்படுத்துவேன் என்றார்.

விஜயகாந்த் தொடர்ந்து பிரசாரம் செய்ததால் அவரது தொண்டையில் புண் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று அதிகம் பேசவில்லை. கையை அசைத்து, கும்பிட்டு பொது மக்களிடம் வேனில் இருந்தபடி வாக்கு கேட்டார்.

ரிஷிவந்தியத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிரச்சார வேன் மீது செருப்பு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த பிரசார வேன் மீது மர்ம நபர்கள் செருப்பை வீசினர். இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த கூட்டத்தை போலீசார் விரட்டியடித்தனர்.

பிரசார வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாலை ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்தை ஆதரித்து டைரக்டர் சீமான் பேசினார்.

No comments:

print