Monday, April 11, 2011

திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு

சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.


நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள், வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும், 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.

இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுக, அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.

திமுக கூட்டண் 140-அதிமுக கூட்டணி 94:

இதன் விவரங்களை கடந்த 3 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டது. அதன்படி, திமுக கூட்டணிக்கு மொத்தம் 140 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

திமுகவுக்கு 90 இடங்கள்:

திமுக கூட்டணியில் திமுகவுக்கு 90 இடங்களும், காங்கிரசுக்கு 24 இடங்களும், பாமகவுக்கு 17 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 3 இடங்களும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 1 இடமும், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு 1 இடமும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்தக் கூட்டணிக்கு மொத்தத்தில் 140 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுகவுக்கு 74 இடங்கள்:

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு 74 இடங்களும், தேமுதிகவுக்கு 8 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 1 இடமுநம், சமத்துவ மக்கள் கட்சிக்கு 1 இடமும், கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள் கிடைக்கும் என்று நக்கீரன் கூறியுள்ளது

No comments:

print