Saturday, April 2, 2011

மு.க. அழகிரி மீது பொய் வழக்கு போடச்சொல்லி டார்ச்சர் : மதுரை கலெக்டர் மீது தேர்தல் அதிகாரி புகார்!

மதுரை: மதுரை கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தியும், அதிமுக சார்பில் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழரசனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியான ஆர்டிஓ சுகுமாறன், நேற்று நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு பேக்ஸ் மூலம் அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி என்ற முறையில், தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையாக செயல்பட்டு வந்தேன். ஆனால் மதுரை கலெக்டர் சகாயம், அடிக்கடி நேரில் வரவழைத்தும், டெலிபோன் மூலமாகவும் திட்டி இப்படிச்செய், அப்படிச் செய் என டார்ச்சர் கொடுத்து வருகிறார். என்னால் சுதந்திரமாக செயல்பட முடியாத அளவுக்கு அளவுக்குமீறி தொல்லை கொடுக்கிறார்.

இதன்காரணமாக எனக்கு மன அழுத்தம் அதிகமாகி மயக்கம் ஏற்பட்டது. கலெக்டர் என்னிடம் மத்திய அமைச்சர் அழகிரி மீதும், கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி மீதும் ஏதாவது பொய் வழக்குப் போடச் சொல்லி நிர்ப்பந்தம் செய்கிறார். என்னால் அப்படி பொய்வழக்குப் போட முடியாது. விதிமுறைகளை மீறினால் தானே அவர்கள் மீது வழக்குப் போட முடியும் எனக்கூறினேன். அதற்கு அவர் தேர்தல் கமிஷன் நடவடிக்கை உன்மீது பாயும் என மிரட்டினார். இந்த தொல்லையால் நான் செத்துவிடுவேன் போல் இருக்கிறது. எனவே என்னை இந்த தேர்தல் அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவித்து விடுங்கள். இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகுமாறன் அழுது கொண்டே நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த 3 நாட்களாக கலெக்டர் சகாயம் எனக்கு கொடுத்து வரும் டார்ச்சர் தாங்க முடியவில்லை. என்னை நடுநிலையாகவோ, சுதந்திரமாகவோ செயல்பட விடாமல் கலெக்டர் சகாயம் தடுக்கிறார். வேட்புமனு தாக்கலின் போது திமுக வேட்பாளர் மூர்த்தியுடன் ஏன் பேசினீர்கள் என்றார். நான் எதுவும் பேசவில்லை, என்றேன். பிறகு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து என்ன பேசினீர்கள் என்று கேட்டார். நான் அவரை சந்திக்கவும் இல்லை, பேசவும் இல்லை என்றேன்.

பிறகு தொடர்ந்து என்னை நேரில் வரவழைத்தும், டெலிபோன் மூலமாக திட்டியும் எனக்குத் தொல்லை கொடுத்து வந்தார். இதேநிலை நீடித்தால் ரத்தக்கொதிப்பு அதிகமாகி நான் செத்துப்போவேன். எனக்கு தற்போது பிரஷர் 190க்கும் அதிகமாகி விட்டது. எனது குடும்பத்தை நினைத்து கவலையாகவும், பயமாகவும் உள்ளது. என்னை உடனடியாக தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்’’ என்றார்.  தேர்தல் நேரத்தில் கலெக்டர் மீது தேர்தல் அதிகாரியான சுகுமாறன் பகிரங்கமாக புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐகோர்ட் முன்ஜாமீன்

மதுரை மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள அம்பலக்காரன்பட்டி கோயில் பகுதியில் மத்திய அமைச்சர் அழகிரி நேற்று ஆலோசனை நடத்தினார். இதை மேலூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரி காளிமுத்து தலைமையில் வீடியோகிராபர் படம் பிடித்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் உதவி தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக கூறியும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன், மேலூர் திமுக ஒன்றியச் செயலாளர் ரகுபதி மற்றும் திமுக பிரதிநிதி ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர் மீது கீழவளவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மன்னன், ரகுபதி, திருஞானம் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் கோரி இன்று காலை மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், மூவருக்கும் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

No comments:

print