Thursday, April 7, 2011

நான் முற்றிலும் நடுநிலையானவன்: மதுரை கலெக்டர் சகாயம் விளக்கம்

மதுரை:  நான் யார் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு செயல்படுகிறேன். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளைத் தான் அமல்படுத்துகிறேன் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் தெரிவித்துள்ளார்.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையத்தால் மதுரை மாவட்ட ஆட்சியராக கொண்டுவரப்பட்டவர் சகாயம். அவர் திமுகவுக்கு எதிராக செயல்படுவதாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குற்றம் சாட்டினார். அதற்கு சகாயம் தான் யார் பக்கமும் இல்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சகாயம் கடந்த 2009-ம் ஆண்டு நாமக்கல் ஆட்சியராக இருந்தபோது தனது சொத்து விவரங்களை வெளியிட்டார். தமிழகத்தில் சொத்துக் கணக்கை வெளியிட்ட முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குரியவர்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு எதிராக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சகாயம் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லூரி மாணவர்களிடையே உரையாடினார்.

கடந்த மாதம் 24-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். அதன் பிறகு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் பிறகு மதுரையில் நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது.

மதுரை மாவட்ட ஆட்சியர் நடுநிலையானவர்: உயர் நீதிமன்றம்

மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் யாருக்கும் ஆதரவாக பேசவில்லை. ஊடகங்களில் அவரது கருத்துகள் தவறாக கூறப்பட்டிருக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சகாயத்தை மாற்றக் கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

print