Saturday, April 16, 2011

8 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் 6 தொகுதிகளில் உள்ள 8 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 8 மணிக்கு மறுவாக்குப் பதிவு தொடங்கியது.


தமிழகத்தில் 13ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டு எந்திரங்கள் உடைக்கப்பட்டன.

சங்கரன்கோவில் தொகுதி புளியம்பட்டியில் ஒரு வாக்குச் சாவடியில் ஒரு கட்சியைச் சேர்ந்த முகவர், வாக்காளர்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு அருகே அழைத்துச் சென்று அவர்களை வாக்களிக்க வைத்துள்ளார். இது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதிவு செய்யப்பட்ட விடியோவில் தெளிவாக உள்ளது. இதை மற்ற கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் தடுக்கவில்லை.

இதையடுத்து இந்த வாக்குச் சாவடியிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில், கிள்ளியூர் தொகுதி அனந்தமங்கலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி தொகுதியில், ஆரணி நகர செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டத்தில், போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரம் ஆகிய வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி தொகுதியில் சம்மட்டிக்குப்பம் வாக்குச்சாவடி மற்றும் சம்மட்டிக்குப்பத்தில் மற்றொரு வாக்குச்சாவடியில் வன்முறை காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சேதமடைந்ததால் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடை மருதூர் தொகுதியில் வளியவட்டம் வாக்குச்சாவடி மற்றும் அதே தொகுதியில் பருத்திக்குடி வாக்குச்சாவடி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் தேர்தலைப் புறக்கணித்ததால் அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மறுவாக்குப் பதிவின் போது வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அடையாள மை இடப்படும். பொதுத் தேர்தலின் போது வாக்களிக்கத் தவறியவர்கள் மறுவாக்குப் பதிவின் போது தங்களது வாக்குகளைச் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

No comments:

print