Saturday, April 2, 2011

தேர்தல் பிரசாரம் : சோனியா 5-ம் தேதி சென்னை வருகை கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேசுகிறார்

சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 5-ம் தேதி தமிழகம் வருகிறார். அன்று சென்னையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழக சட்டசபைக்கு வரும் 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. பிரசாரத்துக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இதனால் 234 தொகுதிகளிலும் கட்சித் தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள், மத்திய, மாநில அமைச்சர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். முதல்வர் கருணாநிதி, 2-வது கட்ட பிரசாரத்தை கடந்த 30-ம் தேதி கோவையில் தொடங்கினார். கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். முதல்வர் செல்லும் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று வேலூரில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வரும் 5-ம் தேதி சென்னை வருகிறார். அன்று தென்சென்னையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சோனியாவும் முதல்வர் கருணாநிதியும் பேசுகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது.
சோனியா வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சோனியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க காங்கிரசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார். வரும் 6-ம் தேதி ஈரோட்டில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். அங்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அன்று மாலை கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். வழிநெடுகிலும் பொதுமக்களை சந்தித்து ஆதரவும் திரட்டவும் திட்டமிட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா, ராகுல் வருவது திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தைம், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சோனியா சென்னை வருகையையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட உள்ளது. அவர் செல்லும் வழிநெடுகிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட உள்ளனர்.

No comments:

print