Tuesday, April 26, 2011

தேர்தல் கமிஷன் விதிமுறைகளில் மாற்றம் தேவை

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த அத்தனை கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, அவர்களின் பேராதரவு பெற்றுள்ளது தேர்தல் கமிஷன். இத்தனை நாட்களாக, ஆவணங்களில் மட்டும் தூங்கிக் கொண்டிருந்த விதிகளை நடைமுறைப்படுத்தியது தான் இந்த புகழுக்கு காரணம்.

ஆனால், தேர்தல் கமிஷனின் விதிகளுக்கு அனைத்து கட்சிகளும் கட்டுப்பட்டது போன்ற தோற்றம் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. இந்த விதிகளால், அரசியல்வாதிகளுக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாது என்ற கருத்தும் இப்போது முளைவிட்டுள்ளது.பொதுவாக, தேர்தல் கமிஷன் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்படுவது, வழக்கு பதிவு செய்யப்படுவது சில விஷயங்களுக்கு மட்டும் தான். குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும், "தனி' தொகுதியில், ஜாதியை மாற்றி குறிப்பிட்டு மனு தாக்கல் செய்வது, விதிமுறையை மீறி அதிக தொகை செலவு செய்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரசாரம் மேற்கொள்வது போன்ற விவகாரங்கள் தான் முன்னிலை பெறுகின்றன.

இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பெரியளவில் இதுவரை தண்டிக்கப்படவில்லை. உதாரணமாக, கடந்த சட்டசபை தேர்தலில், ராஜபாளையம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரா, இந்து ஆதிதிராவிடர் என தவறாக குறிப்பிட்டு, தனித்தொகுதியில் போட்டியிட்டார் என, சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த ஐகோர்ட், சந்திரா எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டது. தொடர்ந்து சந்திரா தரப்பில் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு, "சந்திரா எம்.எல்.ஏ.,வாக தொடரலாம். ஆனால், வழக்கு முடியும் வரை, அவர், எம்.எல்.ஏ., பதவிக்குரிய சலுகைகளை பெறக் கூடாது' என, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது பதவி காலம் முடியும் நேரத்தில், சந்திரா எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றது செல்லும் என, தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அடுத்ததாக, வேட்பாளர் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் வேண்டுவது, அவர் குறித்து வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்கு தான். அதில், அவர் தன் சொத்தை குறைவாக காட்டியுள்ளாரா என்பதை எல்லாம் கவனித்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது வருமானவரித் துறை தான். எனவே, இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷனின் பங்கு குறைந்து விடுகிறது.வேட்பாளர் ஒருவர், தன் சட்டசபை தொகுதியில், 16 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய முடியும். ஆனால், அதை விட அதிகமாக அவர் செலவு செய்தது நிரூபணமானால், அவர் அடுத்த மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் நிலையில், மூன்று ஆண்டுகள் போட்டியிட தடை விதித்தால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது நிதர்சனம்.இந்த சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக மட்டும், 1,500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில், ஓட்டுக்காக பணம் கொடுத்தவர்; பெற்றவர் இருவரும் விசாரணையில், "பல்டி' அடிக்காமல் இருக்க வேண்டும். அடுத்ததாக, வேட்பாளர் சொல்லித்தான் பணம் கொடுக்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் சம்பந்தப்பட்டவர் தண்டனை பெற வாய்ப்புண்டு.ஆனால், இந்த வழக்குகள் அனைத்தும் தேர்தல் முடிந்ததும் நீர்த்து போகக்கூடியவை.

அடுத்ததாக, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரசாரம் செய்தால், அது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும். இந்த வழக்கில் அதிகபட்சமாக அபராதம் மட்டுமே செலுத்த வேண்டி வரும் என்பதால், அது குறித்தும் அரசியல் கட்சிகள் கவலைப்பட வேண்டியதில்லை.இப்படி தேர்தல் கமிஷன் விதிகளில் ஓட்டைகள் இருந்தாலும், அரசியல் கட்சிகள் அதை மதித்து பின்பற்றியது ஆச்சர்யமான விஷயமே. ஒரு வேளை விதிமுறை மீறல் விவகாரம் ஓட்டுவங்கியை பாதிக்கும் என்று நினைத்து அவர்கள் பின்பற்றியிருக்கலாம். தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு மழை குவியும் அதே நேரத்தில், இது போன்ற விதிகளை காலத்திற்கு ஏற்ப மாற்றி, மீறினால் கடும் தண்டனைகள் விரைவாக கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

print