Sunday, February 13, 2011

சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு ரூ. 16 லட்சம்: மத்திய அரசுக்கு பரிந்துரை

சென்னை : ""எம்.பி., தேர்தலில் வேட்பாளரின் செலவு உச்ச வரம்பை, 25 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்சமாகவும், எம்.எல்.ஏ., தேர்தலில் வேட்பாளரின் செலவு உச்சவரம்பை 10 லட்ச ரூபாயிலிருந்து 16 லட்சமாகவும் உயர்த்த, சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம்,'' என தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்தார்.



சென்னை ஐ.ஐ.டி.,யில், "நேஷனல் எலெக்ஷன் வாட்ச்' அமைப்பு சார்பில் நேற்று நடந்த, "தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தம்' தொடர்பான தேசிய கருத்தரங்கில், தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி பேசியதாவது: தேர்தலில் பணம் விளையாடுவதைத் தடுக்க, பீகாரில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அந்த விதிமுறைகள் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் களிலும் பின்பற்றப்படும். தேர்தலில் வேட்பாளர்களுக்கான செலவு உச்சவரம்பை 60 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். எம்.பி., தேர்தலில் வேட்பாளரின் செலவு உச்சவரம்பை, 25 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்சமாகவும், எம்.எல்.ஏ., தேர்தலில் வேட்பாளரின் செலவு உச்சவரம்பை 10 லட்ச ரூபாயிலிருந்து 16 லட்சமாகவும் உயர்த்த, சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் இதற்கான உத்தரவு வரும் என எதிர்பார்க்கிறோம்.

வேட்பாளர்களுக்கு செலவு உச்சவரம்பு உள்ளதைப் போல, அரசியல் கட்சிகளின் செலவிற்கும் உச்சவரம்பு கொண்டு வருவது குறித்து யோசிக்கலாம். தேர்தலில் அரசியல் கட்சிகளுக்காக அரசே செலவிடுவதன் மூலம், கறுப்புப் பணத்தை நீக்கி விட முடியும் என தெரியவில்லை. ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது, வாக்காளர்களுக்கு ஓட்டு போட்டதற்கான ரசீது வழங்குவது தொடர்பாக பேராசிரியர் இந்திரேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, டிசம்பர் 23ம் தேதி, அரசியல் கட்சிகளின் கருத்தைக் கேட்டது. மாதிரி இயந்திரத்தை உருவாக்கி வருகிறோம். இவ்விஷயத்தில் விவாதத்திற்கு பிறகே முடிவெடுக்கப்படும். தமிழக சட்டசபை தேர்தலில், ரேஷன் கார்டை அடையாள அட்டையாகச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக வேறு பல ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் 99 சதவீதம் பேருக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சட்ட மேலவை தொடர்பாக, வரும் 21ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. கோர்ட் தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த விஷயத்தில் முடிவு செய்ய முடியும். இவ்வாறு குரேஷி கூறினார்.

தேர்தல் விதிமீறல் புகார்களை பெற, "கால் சென்டர்': குரேஷி பேசும்போது, ""தேர்தல் கமிஷனில் டில்லியில் 300 பேர், மாநிலங்களில் 300 பேர் என, மொத்தம் 600 பேர் மட்டுமே நிரந்தர பணியில் உள்ளோம். மிகப்பெரிய தேர்தல் பணியை கவனிக்க, குறைந்த ஊழியர்களே நிரந்தர பணியில் உள்ளனர். தேர்தலின் போது, விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற கால் சென்டர்கள் அமைக்கிறோம். இங்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.""இந்த கால் சென்டருக்கு, தேசிய அளவில் ஒரே எண்ணை பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஒரே எண் பயன்படுத்தப்பட்டாலும், இந்த அழைப்புகள் மாநில அளவில் கையாளப்படும். இங்கு பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறது. அதற்கு, "நேஷனல் எலெக்ஷன் வாட்ச்' போன்ற அமைப்புகள் உதவலாம்,'' என்றார்.

பள்ளி பாடத்தில் ஓட்டு: குரேஷி பேசும் போது, ""தேர்தலில் ஓட்டுப் போட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. நாடு முழுவதும் எட்டு லட்சம் இடங்களில் நடந்த விழாவில், 18 வயது பூர்த்தியடைந்த ஒரு கோடியே 70 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டது. பள்ளி பாடத் திட்டத்தில் தேர்தலில் ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்த, பகுதியை இடம் பெறச் செய்வது நல்ல யோசனை. இது தொடர்பாக, மாநில அரசின் பாடத் திட்டம் உருவாக்குபவர்களிடம் பேசுவோம்,'' என்றார்.

பணம் பெற்று செய்தி வெளியீடு: பணம் பெற்றுக் கொண்டு செய்தி வெளியிடுவது பெரும் பிரச்னையாக உள்ளது. இது குறித்து, "பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' விசாரணை நடத்தியுள்ளது. நாங்களும் எங்கள் தரப்பில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பீகார் தேர்தலில் இது தொடர்பாக 86 செய்திகளை கண்டுபிடித்தோம். மக்களை ஏமாற்றியதற்காக இவர்கள் மீது வழக்கு தொடர முடியுமா என, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

No comments:

print